சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று எதிர்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கான கோரிக்கை எமக்கு இதுவரை விடுக்கப்பட்வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பிரேரணை கொண்டு வரப்பட்டாலும் கூட அதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் அரசினுடைய அல்லது நாடாளுமன்றத்தினுடைய மக்களின் காவலனாக அவர் தன்னுடைய கடமையை ஆற்றுவதற்கு தவறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று முற்பகல் 11 மணி முதல் நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
இன்றை சந்திப்பில், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு தொடர்பான விடயங்கள் பற்றி ஆலோசிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.