வீட்டுக்கும் காணிக்குமான உரிமத்தை கொண்ட புதிய சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும்- சஜித்!
எமது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்கினை வகிக்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையில் தேயிலைத் தோட்டத் துறையானது நாட்டின் சௌபாக்கியத்துக்கு முக்கிய பங்களிப்பை நல்கி வருகிறது.
தாழ்நில தோட்டத் தொழிலாளர்களை முதன்மைக் கவனத்தில் கொண்டு எதிர்கால வேலைத்திட்டத்தில் காணி உரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமைகளை வழங்கி தோட்டக் கிராமங்களை உருவாக்கி, வீட்டுக்கான காணிக்கான உறுதிப்பத்திரங்களை பெற்றுத் தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து எப்போதும் பேசுவதை விட, மலையக மற்றும் தாழ்நில பெருந்தோட்ட சமூகங்களின் வேலையற்ற இளைஞர்களுக்கு காணி உரிமை, மூலதன உரிமை, பயிர்ச்செய்கைகளுக்கான உரிமைகளை வழங்கி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளராக மாற்றி, சமூகத்தில் உயர் ஸ்தானத்துக்கு கொண்டு வந்து எமது நாட்டின் தேயிலை உற்பத்திக்கு பங்களிப்பை பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(05) தாழ்நில பெருந்தோட்ட கம்பனிக்காரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயிரிடப்படாத தரிசு காணிகளை இவர்களுக்கு வழங்கி, தேசிய தேயிலை உற்பத்தியை உயர் மட்டத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும்.
ஊதிய அடிப்படையிலான தொழிலாளர்களின் சமூக அடுக்கை மாற்றியமைப்பேன். அவர்களுக்கும் காணிக்கான உரிமையைப் பெற்றுத் தருவேன்.
அத்துடன், குடிமக்கள் என்ற ரீதியில் வீட்டுக்கான, காணிக்கான உரிமை பெற்றுக் கொள்ளும் அரச கொள்கையை முன்னெடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.