சாந்தனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன!
உடல்நலக்குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.
இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சாந்தனின் பூதவுடல் பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர், இறுதி யாத்திரை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் எனும் சுதேந்திர ராசா சென்னையில் கடந்த 28ஆம் திகதி காலமானார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக கடந்த 28ஆம் திகதி காலை உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.