ஷாரிக் ஹஸன் நடிக்கும் 'நேற்று இந்த நேரம்' - திரைப்படம் 

 ஷாரிக் ஹஸன் நடிக்கும் 'நேற்று இந்த நேரம்' - திரைப்படம் 

தமிழ் திரையுலகின் வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் குணச்சித்திர நடிகை உமா ரியாஸ் கானின் வாரிசும், பிக் பொஸ் சீசன் 2 மூலம் பிரபலமான நடிகர் ஷாரிக் ஹஸன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நேற்று இந்த நேரம்' எனும் திரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதியன்று உலகம் முழுதும்  வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் கே. ஆர். சாய் ரோஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நேற்று இந்த நேரம்' எனும் திரைப்படத்தில் ஷாரிக் ஹஸன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், நித்தின் ஆதித்யா, காவ்யா, அரவிந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். கெவின் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிளாப் இன் பிலிமோடெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. ஆர். நவீன் குமார் தயாரித்திருக்கிறார்.

இத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதியன்று  திரையரங்குகளில்  வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மலை பிரதேசம் ஒன்றில் அமைந்திருக்கும் தங்கும் விடுதிக்கு நண்பர்கள் குழுவாக செல்கின்றனர். அங்கு மர்மமான முறையில் நண்பர்கள் மரணமடைகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. '' என்றார்.