வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆசி வழங்கிய சுவாமி நித்தியானந்தா!

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
எனவே உண்மையில் நித்தியானந்தா பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கிய காணொளி எதுவும் வெளியாகியுள்ளதா, என நாம் ஆராய்ந்த போது கடந்த 2025.04.03 ஆம் திகதி சுவாமி நித்தியானந்தாவின் KAILASA’s SPH Nithyananda என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த நேரலையை எம்மால் காணமுடிந்தது.
அதில் நித்தியானந்தா நேரலையில் பேசிக்கொண்டு இருக்கும் போது நேரலையில் மக்களினால் பதிவிடப்பட்ட கமென்ட்களுக்கும் பதில் வழங்கியிருந்தார்.
அப்போது நேரலையில் ஒருவர் சிறீலங்கா தமிழ் ஊசி கட்சி அர்ச்சுனா வடமாகாண முதலமைச்சராக வருவதற்கு சுவாமிஜி அருள் பாலிக்க வேண்டும் – குப்புசாமி தஞ்சாவூர் என கமென்ட் செய்துள்ளதாக நித்தியானந்தா அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நித்தியானந்தா அந்த கமென்ட்டில் முதலமைச்சர் என தெரிவிக்கப்பட்டுள்ள சொல்லை தவிர்த்து விட்டு மற்ற விடயங்களை தெரிவித்து இவ்வாறு செய்தி போட்டுள்ளீர்கள் என்றும் ஆன்மீக ரீதியாக தான் யாருக்கும் ஆசீர்வாதம் வழங்குவதாகவும் மாத்திரமே குறிப்பிட்டுள்ளார்.
தவிர எந்த இடத்திலும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கி எந்த கருத்துக்களையும் அந்த காணொளியில் தெரிவிக்கவில்லை.
மேலும் சுவாமி நித்தியானந்தாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு நித்தியானந்தா ஆசி வழங்கிய ஏதேனும் பதிவுகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்தோம். ஆனால் அங்கு அவ்வாறான எந்த பதிவுகளும் இருக்கவில்லை.
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நித்தியானந்த, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவித்து பகிரப்படும் காணொளியில், சுவாமி நித்தியானந்த அவரின் யூடியூப் தளத்தில் ஒளிபரப்பாகிய நேரலையில் பகிரப்பட்ட கமென்ட்டையே வாசித்தார் என்பதோடு அதில் அவர் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.