நாட்டில் நீதித்துறை சிறப்பாக இயங்குகிறது - இசாம் மரிக்கார்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என்பதை வெளிப்படுத்துகின்றது என தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிவதற்கான விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு எங்களுக்கு சந்தோசத்தை தந்திருக்கிறது. இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் சிறப்பாக இயங்குகிறது என இந்த தீர்ப்பு மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகிறது.
குறிப்பாக, இளைஞர்களுக்கான ஒரு அரசியல் நியாயம், இந்த காலத்தில் இல்லாத போதும் நீதிமன்றம் இதற்கான சரியான ஒரு நிலைப்பாட்டை இன்று அறிவித்திருக்கிறது.
குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் இதற்கு முன்பாக நடைபெற்ற தேர்தல்களில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்ற போது, அந்த வேட்புமனுக்களில் என்ன தவறுகள் இருக்கிறது என்பதை அந்த கட்சியின் தலைமையோ, செயலாளரோ, மாவட்ட அமைப்பாளரோ கவனிக்காமல், அந்த அரசியல்வாதிகள் ஏதோ தவறு விட்டார்கள் என்று ஊகித்துக் கொண்டு அவற்றை புறம் தள்ளிய வரலாறு தான் இருந்திருக்கிறது.
ஆனால் இந்த முறை எங்களுடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை நாங்கள் எதிர்த்தோம். எங்களை நம்புவதற்கு யாரும் இல்லை. புத்தளத்தில் பலம் பொருந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் கூறிய ஒரு விடயம் தான். இது சாத்திம் அற்றது ; அவர் ஏதோ தவறு விட்டிருக்கிறார்.
இந்த வேட்புமனுவை மீண்டும் ஏற்க மறுப்பார்கள் என்று. ஆகவே தோல்வி அடைந்து விட்டார்கள்.
அடுத்த 05 வருடத்திற்கு இவர்களுக்கு அரசியல் இல்லை என்று எல்லோரும் பேசிய போது இளைஞர்களாகிய நாங்கள், நம்பிக்கை என்ற விடயத்தில் தெளிவாக இருந்தோம். தன்னம்பிக்கை என்ற வியடம் இளைஞர்களின் இரத்தத்திலே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் நீதிமன்றத்திற்கு வந்து நாங்கள் அந்த வேட்புமனுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.
இதனடிப்படையிலே 5 நாட்கள் தொடராக புத்தளம் கொழும்பு என சட்டத்தரணிகளை சந்தித்து தேவையான ஆவணங்களை கொடுத்து நாங்கள் செய்தது பிழை இல்லை என்று கூறி இந்த தீர்ப்பினை வென்று எடுத்திருக்கிறோம்.
ஆகவே, இந்த தீர்ப்பானது இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை என்பதை வலியுறுத்துகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற நீதியரசர்களுக்கும் அவற்றை பெற்றுத் தர உதவிய சட்டத்தரணிகளுக்கும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேநேரம் எதிர்காலத்தில் இந்த நாட்டில் அரசியலுக்குள் இளைஞர்கள் வர வேண்டும் என்பதற்கு இது முக்கியமான உதாரணமாகும். ஆகவே பழையவர்கள் சிந்திக்கும் அந்த தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்காது.
பழையவர்கள் அரசியல் கட்சிக்குள் இருந்து கொண்டு செய்யும் விடயங்கள் நடக்காது. புதியவர்கள் அரசியலுக்குள் வர வேண்டும். அது தான் நம் நாட்டிற்கு தேவையான மாற்றத்தை கொண்டு வரும். எதிர்வரும் தேர்தலுக்கு இந்த தீர்ப்பு நிச்சயம் ஒரு வெற்றியை எங்களுக்கு பெற்றுத்தரும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (4) தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.