யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம்

யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை.

அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டியிருந்தார்.