நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் பாரவூர்தியொன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியாகினர்.
இதில் மேலும் பலர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியது.
பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்