ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்டின் பிரத்தியேக செயலாளர் திரு.ரோப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்ஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்கள் இடையே இந்நாட்டின் பல்வேறு பொருளாதார, சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றன.
இந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இந்த தூதுக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.