ஜனாதிபதித் தேர்தல் 2024– வன்முறை அபாயம் குறித்த எச்சரிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வலிந்து வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.
தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டுவரும் சில அரசியல் கட்சிகள், தேர்தலின் பின்னர் தாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காதபட்சத்தில் வன்முறைகளைக் தூண்டலாம் என்று அரச புலனாய்வுத்துறை முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாகத் தெரிவானாலும் நியமனம் இரத்தாகலாம்.
இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் தேர்தல் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் தேர்தல் மனுவொன்றினூடாக அவரது நியமனத்தை இரத்துச்செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘‘தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரொருவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ததன் பின்னர் அவருக்கு ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் தேர்தல் விதிமுறைகளை மீறும்பட்சத்தில், அவர் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் தேர்தல் மனுவொன்றினூடாக அவரது நியமனத்தை இரத்துச்செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன.
அந்தவகையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தேர்தல் விதிமுறைகளை மீறிய பாரிய சம்பவங்கள் பதிவாகவில்லை.
எனினும், நடைமுறையிலுள்ள சட்டங்களை மேலும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.