வெள்ளத்தில் மூழ்கியுள்ள மற்றும் மூழ்கப் போகும் பகுதிகளின்  விபரம்!

மட்டக்களப்பு - சித்தாண்டியின் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மற்றும் உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டமை போன்றவற்றினால் தொடர்ச்சியாக வெள்ள நீர் அதிகரிக்கத் தொடங்கியது.   

சித்தாண்டி 04 இல் அடங்குகின்ற உதயனமூலை, மதுரங்காட்டு கொலனி ஆகிய பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

குறிப்பாக சித்தாண்டி 04 கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்திற்கு முன்னாலுள்ள வளைவு வீதியில் சுமார் 5 அடி வரையில் நீர் நிரம்பி காணப்படுவதுடன், உதயன்மூலை பாலர் பாடசாலை முன்வீதியில் சுமார் 2 அடி வரையிலான நீரும், சித்தாண்டி 04 பழைய சந்தை வீதியில் 3 அடிவரையிலான நீரும் தேங்கியுள்ளது. 

சில உள் குறுக்கு வீதிகள் 5 அடிக்கு மேற்பட்ட நீரைக்கொண்டும் காணப்படுகின்றன. 

சித்தாண்டி 03 மாரியம்மன் ஆலயத்தை அண்டிய பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இங்கு நீரினுடைய மட்டம் 6 அடிக்கு மேல் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு புணானை ஊடான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியிலுள்ள புணானை ஊடான வெள்ளம் காரணமாக வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இவ்வீதியால் லொறி, டிப்பர் வண்டி போன்ற பெரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சிறிய வாகனங்களில் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் மூடப்பட்டுள்ளன.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சுவர் இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஹிக்குரக்கொட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வீட்டில் வசித்துவந்து குறித்த பெண்ணின் கணவரும், குழந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.