பெருந்தொகை போதைப்பொருள் கடற்படையினரால் மீட்பு!
அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஹெரோயின் உள்ளிட்ட 200 கிலோவிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் ஆழமான கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பலநாள் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, ஐந்து உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பலநாள் படகு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மாத்தறை – தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் 400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.
கடற்படை மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, ஐந்து மீனவர்கள் கைதாகினர்.
இந்த வருடத்தின் இதுவரை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 15 ஆயிரத்து 160 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பு, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கடற்கொள்ளை என்பவற்றை கண்காணிக்க மற்றும் தடுப்பதற்கான உலங்கு வானுர்திகள் வெளிநாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக வான்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
குறித்த உலங்கு வானுர்திகள் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.