அசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?

அசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?

சபாநாயகர் அசோன ரன்வல நேற்று வெள்ளிக்கிழமை தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கலாநிதி பட்டத்தை பெறாது கலாநிதியென தம்மை அசோக ரன்வல அடையாளப்படுத்திக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பூதாகரமானதன் பின்புலத்திலேயே அவர் தமது பதவியை துறந்துள்ளார்.

அசோக ரன்வல கலாநிதி இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் காதுகளுக்கு செய்தி சென்ற உடனேயே அவர் உடனடியாக இதுதொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் அசோக ரன்வலவிடமும் வினவியுள்ளதாக தெரியவருகிறது.

கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டமைக்கான சான்றுகள் அசோக ரன்வலவிடம் இல்லை என்பதால் ஜனாதிபதி அதிருப்தியுற்றுள்ளதாகவும் பின்னர் அவரை பதவி துறக்குமாறும் கோரியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தப் பின்புலத்தில்தான் அரச ஊடக பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பில், அரசாங்கத்தில் தவறு செய்பவர்கள் எந்த பதவியை வகித்தாலும் அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் எச்சரிக்கை வெளியாகிய சில மணித்தியாலத்திலேயே தமது பதவி துறப்பு அறிவிப்பை அசோக ரன்வல வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சபாநாயகராக அசோக ரன்வல நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டிருந்த தினத்தன்று கலாநிதி அசோக ரன்வல என்றே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விழித்திருந்தார். என்றாலும், அசோக ரன்வல கலாநிதி என்ற குறிப்புடன் தமது தகவல்களை நாடாளுமன்றத்துக்கு வழங்கியிருந்ததன் பின்புலத்லேயே பிரதமர் அவரை கலாநிதி என விழித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.