புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுன் கைது!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு நாள் முன்னதாகவே அதாவது டிசம்பர் 4 ஆம் திகதி இரவு திரையிடப்பட்டது. அதுவும் ஐதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் அந்த ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுனும் வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் அவரைக் காண குவிந்தனர்.
இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் கூடியதால் பொலிஸால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 9.30 மணிக்கு புஷ்பா படத்தின் ப்ரீமியர் ஷோவுக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தியேட்டரின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே கும்பலாக சென்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்கிற அல்லு அர்ஜுனின் ரசிகையும் புஷ்பா 2 படம் பார்க்க தன் மகன் உடன் வந்திருந்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மயங்கி விழுந்த அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மீதும் நடிகர் அல்லு அர்ஜுன் மீது சிக்கட்பள்ளி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன் முன்னறிவிப்பின்றி படம் பார்க்க வந்ததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் அல்லு அர்ஜுன். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடர்ந்த சிக்காட்பள்ளி பொலிஸார். அவரை கைது செய்துள்ளனர். இன்று (13) ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த பொலிஸார், அல்லு அர்ஜுனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.