மாமனிதர் ஆக மதிப்பளிப்பு
தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த நல்ல மனிதர் ஒருவரை தமிழர் தேசம் இழந்துவிட்டது. எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு அயராது உழைத்த அற்புதமான மனிதர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம்.
திரு.மாணிக்கம் சுந்தரமூர்த்தி அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர், தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும்,எளிமையான பண்பும், அழகான சிரிப்பும் அவரது ஆளுமையின் அழகு.
இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர் .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளியாக, பாராளுமன்ற உறுப்பினராக,தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாகியாக, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளராக, எழுத்தாளராக, கல்வியிலாளராக பல பணிகளை முன்நின்று அரும்பணியாற்றியவர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் தமிழீழ மண்ணில் இடம்பெற்ற நடைமுறை அரச கட்டுமானப்பணிகளில் முக்கிய பணிகளை ஆற்றியவர்.
சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்.
தமிழீழப் போராட்டப் பயணத்தில் மறைமுகமாக அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. ஆபத்தான போராட்டப்பாதையைச் சரியாக புரிந்து கொண்டு பயணித்து வந்தவர்.
திரு.மாணிக்கம் சுந்தரமூர்த்தி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்