அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா?
அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேற்றையதினம் (26) பதில் வழங்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிடமிருந்து அறவிடப்பட்ட வரித்தொகையை மீள வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் முன்வைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பொறிமுறையை உருவாக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரி விலக்கு அளிக்கப்பட்டவர்களிமிருந்து 10 வீத வரியை அறவிடுவதன் மூலம் அநீதிகள் இழைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கம் சமீபத்தில் வைப்பு வரியை 5 முதல் 10 வீதமாக உயர்த்தியது.
ஆனால் ரூ. 150,000 மாதாந்த வருமான வட்டி பெறுபவர்களுக்கு மாத்திரமே இந்த வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.