24 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்த மலையக இளைஞர்கள்!

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில், மலையகத்தைச் சேர்ந்த 9 பேர் இடம்பிடித்துள்ளனர்.

குறித்த 9 பேரும், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான துணைத்தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரை தொடர்ச்சியாக நடனமாடி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை, மெரயா, அக்கரபத்தனை, டயகம, ஹப்புத்தளை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த, 16 முதல் 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளே இந்த சாதனை படைத்துள்ளனர்.

நடனத்தில் ஈடுபட்டவர்களுக்கு பகுதியளவில் சிறிய இடைவேளை வழங்கப்பட்டிருந்தது.

ஹட்டன் டான்ஸ் ஸ்டார் அணியைச் சேர்ந்த 9 நடனக் கலைஞர்கள் இடைவெளி ஏதும் இன்றி  தொடர்ந்து 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை படைத்தனர். 

இவ்வுலக சாதனை முயற்சியை  தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, கண்டி மாவட்டத் தலைவர் தியாகராஜா சந்திரகுமார், கண்டி மாவட்டப் பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் போன்றோர்  உலக சாதனையாக உறுதி செய்தார்கள்.     

இந்த சாதனை நிகழ்வில் மலையகத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பங்கேற்றமை சிறப்பு அம்சம். 

அந்த வகையில் அப்புத்தளை, மெராயா, அக்கரபத்தனை, நீர்கொழும்பு, டயகம ஆகிய பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்கேற்றிருந்தார்கள். 

இதில் பிரேம்நாத், டிலான், ஹசினி, சுமதி, ஜிவேஸ், மோஜன், மதுசான் கபிலக்ஷன், பவிநாத் ஆகியோர் பங்கு பற்றி இந்த சோழன் உலக சாதனை புத்தகத்தில் தமது பெயரை நிலை நாட்டி இருக்கின்றார்கள். 

சோழன் உலக சாதனைப் படைத்த நடனக் கலைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக வாழ்த்திப் பாராட்டினார்கள்.