கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
பதுளை மாவட்ட நீதிபதியாக நடித்து பலரை ஏமாற்றிய, மாத்தறை, கந்தர பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வீடொன்றுக்குள் சிறைப்பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு செல்ல தயாராகி உள்ளனர்.
இதன்போது மற்றுமொரு அழைப்பில் தான் பதுளை மாட்ட நீதிபதி எனவும் பணம் கொடுக்கல் வாங்கலுக்காக வந்த சந்தர்ப்பத்தில் தன்னை வீடு ஒன்றிற்குள் சிலர் தடுத்து வைத்திருப்பதாக தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கம் அல்லது சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான வேறு நிறுவனமோ இந்த அடையாள அட்டை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மீட்டுள்ளனர். அங்கு அவர் வழக்கறிஞர் ஒருவரின் அடையாள அட்டையை காட்டினார்.
இது தொடர்பில் மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவித்த பொலிஸார், உரிய அடையாள அட்டையை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள் சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடி, அவர் போலி மாவட்ட நீதிபதி மற்றும் போலி சட்டத்தரணி என காட்டிக் கொள்ளும் நபர் என பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் 20 வருடங்களுக்கு முன்னர் பொரளை பிரதேசத்தில் உள்ள இடமொன்றில் இருந்து இவர் இந்த போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டத்தரணி போல் காட்டிக்கொண்டு ஹோமாகம, பதுளை, குளியாப்பிட்டிய பிரதேச மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பலரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றி 60 லட்சம் ரூபாவை மோசடியாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் கெசல்வத்தை பொலிஸ் பிரிவில் அளுத்கடை நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.