விமான நிலைய பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்!
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் கடமையில் இருந்து விலகியிருந்தனர்.
தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளின் சுமையை தாங்க முடியாது என தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பங்களாதேஷின் டாக்கா மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் செல்லும் நான்கு விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்த வகையிலும் இதுவொரு தொழிற்சங்க நடவடிக்கை அல்ல என கட்டுநாயக்க விமான நிலைய சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக விஜயபத்திரத்ன தெரிவித்துள்ளார்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிவதால், பணிச்சுமையை ஏற்க தாம் சிரமப்படுவதாகவும், விமானம் தாமதம் போன்ற காரணங்களால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இதனால் ஊழியர்கள் தாமாக முன்வந்து கடமையிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிர்வாகம் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாக உறுதியளித்ததையடுத்து விமான நிலைய ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜனக விஜயபத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சோதனை கூடத்தின் ஊழியர்கள் தமது கடமைகளிலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.