தமது ஆட்சியின் கீழ் பெண்களுக்கான ஜனாதிபதி செயலணி - சஜித் பிரேமதாச 

தமது ஆட்சியின் கீழ் பெண்களுக்கான ஜனாதிபதி செயலணி - சஜித் பிரேமதாச 

தமது ஆட்சியின் கீழ் பெண்களுக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெண்களுக்கான பலத்தை வழங்கும் வகையில் மகளிர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுண்நிதி கடனின் கீழ் கடன் பொறியில் சிக்கியுள்ள பெண்களை பாதுகாக்க தலையிட்டு, அதிலிருந்து அவர்களை விடுவிக்க தமது தலைமையிலான அரசாங்கம் செயற்படும்.

இதனூடாக வீரமிக்க பெண்களை பொருளாதார அபிவிருத்திக்கு தொழில் முனைவோராக மாற்ற முடியும். 

குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க தேசிய போஷாக்குக் கொள்கை ஒன்று தயாரிக்கப்படும்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2023இல் மாத்திரம் ஒன்பதாயிரத்து 400 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் ஆயிரத்து 502, பாலியல் துஷ்பிரயோகங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்றைய அரசியலிலும் ஜனநாயகத்திலும் முக்கிய அடிமட்ட சக்தியாக பெண்கள் கருதப்பட்டாலும், பெண்கள் தற்போது வெறுமனே அரசியல் ஆயுதமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.