Channel 4 ஆவண காணொளி தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ விளக்கம்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான Channel 4  வெளியிட்ட காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.

Channel 4 ஆவண காணொளி தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ விளக்கம்

ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான Channel 4  வெளியிட்ட காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதியாக தாம் தேவாலயம் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாயல் ஒன்றை ஸ்தாபிக்க உதவி அளித்ததாகவும் வணக்கத்திற்குரிய பாப்பரசர் இலங்கை வருவதற்கு தாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமக்கு ஆட்சிக்கு வருவதற்காக பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டிய தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Update ...

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் தாம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் 'ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்' என்ற பெயரில் இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம் ஒன்று வெளியிடப்பட்டது.

இதில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணி தொடர்பில் தகவலாளரான ஹன்சீர் அஷாட் மௌலானா தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தனின் முன்னாள் நிதி மற்றும் ஊடக பொறுப்பாளராக செயற்பட்டிருந்தார்.

அத்துடன், பெயர் வெளிப்படுத்தப்படாத முன்னாள் அரச அதிகாரி ஒருவரும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் இதில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஹன்சீர் அஷாட் மௌலானா என்ற தகவலாளர் வெளிப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான சதித்திட்டமாகவே ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தவிடயம் தொடர்பில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தம்முடன் கலந்துரையாடியதாகவும் அதற்கமைய தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கும் சுரேஷ் சாலேவுக்கும் இடையில் தாம் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஹன்சீர் அஷாட் மௌலானா என்ற தகவலாளர் குறித்த ஆவணப் படத்தில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இடமாற்றம் செய்ததாக மற்றுமொரு தகவலாளரான பெயர் வெளிப்படுத்தப்படாத முன்னாள் அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் செனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப் படம் தொடர்பில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தம்மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று தெரிவித்துள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வு பணிப்பாளராக கடந்த காலத்தில் செயற்பட்ட போது, தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரானுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேஜர் ஜெனரல் சலே எனது விசுவாசிகளில் ஒருவராக அந்த காணொளியில் விவரிக்கப்படுகிறார்.

எவ்வாறாயினும், அவர் பல ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றிய ஒரு தொழில் இராணுவ அதிகாரியாவார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இராணுவ அதிகாரிகளும் அரசுக்கே விசுவாசமானவர்களே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல.

2015ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகி தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மேஜர் ஜெனரல் சாலேவுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை.

2016ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வு பணிப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதன் பின்னர், 2018 டிசம்பர் வரை மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றியிருந்தார்.

இந்த காலப்பகுதியில், தற்கொலை குண்டுதாரிகளுடன் அவர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார் என்ற செனல் 4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில், தேசிய பாதுகாப்பு பாடநெறிக்காக அவர் இந்தியாவில் தங்கியிருந்தார் என்பதையும் சுரேஷ் சாலே செனல் 4 தொகைக்காட்சிக்கு அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில், அவர், இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்பதுடன், 2019 டிசம்பர் மாதம் வரையில், அவர் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக சுரேஷ் சாலே மீண்டும் புலனாய்வு பிரிவில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தற்கொலை குண்டுதாரிகளை சந்தித்தாக வெளியான தகவல், போலியாக புனையப்பட்டதாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்கொலை குண்டுதாரிகளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தொடர்பு காணப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்வதற்காக 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணத்தீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி வணாத்துவில்லு பகுதியில் வீடொன்றில் வெடி மருந்துகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ஆரம்பிக்கப்பட்ட காவல்துறை விசாரணைகள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் வீணடிக்கப்பட்டதாக குறித்த ஆவணப் படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணப்பட்ட அரசாங்கம், புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரை தண்டிக்கும் வகையிலான கொள்கையை கையாண்டமை முழு நாடும் அறியும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 2015 - 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தினால் முஸ்லீம் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கவனக்குறைவாக செயற்பட்டதாக, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுதாரிகள் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 முதல் 25ஆம் திகதி வரை லேவெல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பயிற்சி முகாம் நடத்தியுள்ளதுடன் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுவரெலியா பகுதியில் கூட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

இந்த சகல விடயங்கள் தொடர்பிலும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு காவல்துறையினரே பொறுப்பாக செயற்பட்டதுடன் புலனாய்வு பிரிவினர் செயற்படவில்லை.

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து விசாரணைகளை முறியடித்ததாக குறித்த ஆவணப்படத்தில் தம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவை இடமாற்றியதற்காக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல்நீதிமன்றில் விசாரணை இடம்பெறும் வழக்கு ஒன்றில் அழுத்தம் வழங்குவதற்காக அரசியல்வாதி ஒருவருடன் ஷானி அபேசேகர சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்த எந்தவொரு காவல்துறை உத்தியோகத்தரும் தாம் ஜனாதிபதியாக பதவியேற்றிதன் பின்னர் இடமாற்றப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை வெளிப்படுத்துவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக செனல் 4வின் ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது முழுமையாக உண்மைக்கு புறம்பான விடயம் எனவும், குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டமையை சகல இலங்கையர்களும் அறிவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சியின் இந்த புதிய ஆவணப் படம் 2005ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு சேறு பூசும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ராஜபக்ஷவுக்கு எதிரான தாக்குதலாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் குறித்த தொலைக்காட்சியினால் இலங்கை தொடர்பில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படமும் குற்றச்சாட்டும் சோடிக்கப்பட்ட உண்மைக்கு புறம்பான விடயமாகும்.

தம்மை ஜனாதிபதியாக்குவதற்காக முஸ்லீம் பயங்கரவாதிகள் சிலர் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றமை புதுமையான விடயமாகும்.

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்;டாலும் தாம் அரச பதவியை வகித்த காலப்பகுதியில் கிறிஸ்த்தவ மக்களுக்கு செய்யக் கூடிய சகல சேவைகளை தாம் செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியிடமிருந்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

நான்கு காரணங்களை முன்னிறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து செனல் 4 தொலைக்காட்சிக்கு கடிதம் ஒன்றைய அனுப்பிய அவர், குறித்த விடயம் அடிப்படையற்றது என தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாகவும் அந்த கடிதத்தில் சுரேஷ் சலே சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் சட்டத்தரணி கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் பிரித்தானியாவின் தொடர்பாடல் கண்காணிப்பகமான தொடர்பாடல் அலுவலகத்துக்கும் அறியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரியுள்ளார்.

அதேவேளை தெரிவுக்குழுக்கள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது என்றும் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

எனவே இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்