பொகந்தலாவையில் வியாபார நிலைய நிர்வாகத்தினரால் ஊழியர் மீது தாக்குதல்!
நுவரெலியா - பொகவந்தலாவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பொகவந்தலாவை, கியூ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றைய தினம்(21.08.2024) பணி முடிந்து வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளன நபர் நேற்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில், பிரதேச மக்கள் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது உறவினர்களால் தொலைபேசியில் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, '' தான் சிலரால் தாக்கப்படுவதாகவும், உயிருடன் இருந்தால் வீடு திரும்புவேன்" என கூறியுள்ளார்.
அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போது எவ்வித தகவலும் பெறமுடியாத நிலையில் நேற்று இரவு பொகவந்தலாவை பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தொடர்ந்தும் தேடுதலை பிரதேச மக்கள் முன்னெடுத்த நிலையில், நீண்ட நேரம் கழித்து உறவினர்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது, “தான் தாக்குதலுக்கு உள்ளாகி, டின்சின், பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலுக்கருகே கிடப்பதாக” கூறியுள்ளார்.
தகவலறிந்த பிரதேச மக்கள் குறித்த இடத்திற்கு சென்று அவரை மீட்டு பொகவந்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட விசாரணையில், தான் கடை நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டு இரவு முழுதும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்த பிரதேச மக்கள் தாக்கப்பட்டவருக்கு நீதி கோரி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.