கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர் முஸ்தபா மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த பைசர் முஸ்தபா, வர்த்தமானியை திருத்தினால் மனுவை மீளப்பெறுவேன் என அறிவித்திருந்தார்.
இது குறித்து கல்வி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இவ்விவகாரத்தை தாமும் நீதிமன்றத்தின் ஊடாகவே அணுகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி பரீட்சைகள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பைசர் முஸ்தபா மனு தாக்கல் செய்தமையால், நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்விடயத்தில் தலையீடு செய்வதாக ஜனாதிபதி தமக்கு வாக்குறுதியளித்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் தெரிவித்திருந்த போதிலும், நீதிமன்ற தீர்ப்பு வரும் காத்திருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது.