கொழும்பில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு - வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டை குழந்தைகள் மரணித்தமை தொடர்பில், களுபோவிலை வைத்தியாசாலை நிர்வாகத்தின் மீது பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரிகா கிரிவந்தெனிய தெரிவித்தார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கெஸ்பாவை - ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த பெண்னொருவர் கடந்த 8ம் திகதி பிரசவத்திற்காக களுபோவிலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் கடந்த 9ம் திகதி இரட்டைக் குழந்தைகளை பிரசவித்திருந்தார்.
குறித்த இரட்டைக் குழந்தைகளும் குறைந்த நிறையுடன் பிறந்துள்ளதாக கூறி, குறைமாத குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து, அதில் சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை கடந்த 18ம் திகதி உயிரிழந்தது.
அந்த ஆண் குழந்தையின் உடலில் நுண்ணுயிர் தாக்கம் இருந்ததன் காரணமாக இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் மூச்சு திணறல் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நேற்றைய தினம் மற்றைய குழந்தையை பார்வையிட குறைமாத குழந்தைகள் பிரிவுக்கு சென்ற தாய்க்கு அந்த குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், களுபோவில வைத்தியசாலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குறித்த இரட்டைக் குழந்தைகளின் உறவினர்களால் கொஹுவலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனமே குறித்த இரட்டைக் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.