உங்கள் பிள்ளைகளை காக்கும் பெற்றோரையே அடிக்கின்றீர்கள் - பொலிஸார் மீது காட்டம்!
நாடளாவிய ரீதியில் இருந்து கொழும்பில் கூடியிருக்கும் கல்வி சார் ஊழியர்களான அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பத்தரமுல்லை கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம், நீர் தாரை பிரயோகம் போன்றவற்றை மேற்கொண்டனர்.
அங்கு பெரும் கூட்டம் நிலவுவதால் அந்த பகுதியில் வாகனங்களை செலுத்தாது மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
தமது சம்பள பிரச்சினை, நிரந்தர நியமனங்கள், தற்காலிக பணியில் இருக்கும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோரின் பிரச்சனைகள் தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று முற்பகல் தொடக்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை, பெளவத்தை, மூன்று பால சந்தை பகுதியில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சிலர், “பெற்றோருக்கு அடுத்தபடியாக இருக்கின்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்க யாரும் இல்லை.
இங்கு எங்கள் மீது கண்ணீர் புகை மற்றும் அழுக்கு நீரை பீய்ச்சியடிக்கும் பொலிஸாரின் பிள்ளைகள் எங்களிடம் கல்வி கற்க வரும் போது அவர்களை நெஞ்சோடு அணைத்து அன்போடு கல்வியை புகட்டுகிறோம்.
ஆனால், பெற்றோரின் அரவணைப்பு போன்று கல்வியையும் புகட்டும் ஆசிரியர்களை அவமதிப்பது எவ்வாறு என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று கண்டனம் வெளியிடப்பட்டது.