முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு பிரான்ஸில் உதவிக்கரம்!

தமிழர் தேசத்தின் நிமிர்வுக்கு முள்ளந்தண்டாக இருந்து, களமாடி காயமுற்று முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், உறவுகளுக்கான உதவித்திட்டமொன்றினை முன்னெடுத்து வரும் தமிழர் வர்த்தக சங்கம் - பிரான்ஸ், இந்த செயற்திட்டம் தொடர்பான சந்திப்பொன்றினை நடத்தியிருந்தது.
பாதிக்கபட்டவர்களின் காப்பகமாக மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழை மையத்துக்கு 2023ம் ஆண்டு நேரடியாக சென்று வந்திருந்த தமிழர் சங்க நிர்வாக பிரதிநிதிகள், இது தொடர்பான பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
பாதிப்புக்குள்ளான 250 பேரின் குடும்பங்களது வாழ்வாதாரத்துக்கான அத்திவாரமாக, 5 இலட்சம் ருபாய் அவர்களது பெயரில் வங்கியில் வைப்பிலிடம் செயற்திட்டமாக இது அமைகின்றது.
குறிப்பாக பாதிப்புக்குள்ளான பலர் குறிப்பிட்ட குறுகிய காலத்துக்குள் இறந்துள்ள நிலையில், குறித்த செயற்திட்டத்தினை விரைவுபடுத்தி நிறைவுறத்செய்யும் நோக்கில், கடந்த யூன் 9ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
தமிழர் வர்த்தக மையமான லாச்சப்பல் வர்த்தக பெருமக்கள் மற்றும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பரிசின் புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ள தமிழர் வர்த்தக பெருமக்களுக்கும் இந்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் உயிரிழை மையம் தொடர்பான குறுகிய காணொளி விவரணம் திரையிடப்பட்டதோடு, தொடர்ந்து களத்தில் விழுப்புண்ணுற்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்புக்குள்ளான முன்னாள் பெண் போராளி ஒருவர், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களது அன்றாட துயரத்தினை பகிர்ந்தார்.
இது பலரை உணர்வுபூர்வமாக உயிரிழைக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு வழிகோலியிருந்தது.
சந்திப்பில் பங்கெடுத்திருந்த பலரும் தமது பங்களிப்பாக ஒவ்வொரு குடும்பங்களுக்கான வாழ்வாதார அத்திரவாத்துக்கான உதவித்தொகையினை வழங்க முன்வந்தனர்.
இதன் விபரங்களை எமது தளத்தில் பார்வையிடலாம்...
_________________________