இலங்கை நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் தீர்வுகள் பயனற்றவை!
இலங்கை தற்போது சந்தித்துள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு, அரசியல் தீர்வுகள் பயனற்றவை என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தொகை கிடைத்த பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
நிதி முகாமைத்துவம் தொடர்பில், அன்று ஆட்சியில் இருந்த அரசாங்கம் தோல்வி கண்டதையடுத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இதற்குப் பொருத்தமான தீர்மானமாக கடன் மறுசீரமைப்பு மூலம் தீர்வைப் பெறுவதற்கு ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காக, நான்கு முக்கிய நோக்கங்களைக் கருத்திற்கொண்டு 2024ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இயலுமான வரை அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல், அரசாங்கத்தின் மூலதனச் செலவுகள் மற்றும் நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரித்தல், இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைக் குறைத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.!