ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் - ஜீவன்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முதல் விடயம் மலையகத்தில் வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
அந்தவகையில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
இரண்டாவது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம்.
தற்போது சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
இது தற்காலிக தீர்வு மாத்திரமே. எனவே, நிரந்தர தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும்.
இறுதியாக காணி உரிமை விடயமாகும். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி 4,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
காணி உரித்தும் வழங்கப்பட வேண்டும். இவற்றை செய்து, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரை நாம் தாம் ஆதரிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.