மூடப்பட்ட வீதிகள் மற்றும் வௌ்ள அபாயம் உள்ள பகுதிகள் பற்றிய அறிவிப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் மழை கொண்ட காலநிலை சற்று குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளிலும் மழைக்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது.
இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும் இன்றும் நாளையும் காலநிலை சற்று சீரடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடையிடையே மழை கொண்ட காலநிலை தொடரும் சாத்தியமுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் மழைக்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவாகவே உள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை புதிய காற்று சுழற்சி காரணமாக மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
இந்தநிலையில், மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியில் நேற்று மாலை முதல் கல்லெல தொடக்கம் மன்னம்பிட்டி வரையிலான வீதியின் போக்குவரத்து சகல வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.
ஆகவே வெலிகந்த, திம்புலாகல, மட்டக்களப்பு வரை பயணம் செய்யவுள்ள பயணிகளின் நலன் கருதி புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாதையின் நிலைமை பரிசீலனை செய்யப்பட்ட பின் போக்குவரத்து இடம்பெறுவது தொடர்பான தகவல் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.
இதுதவிர, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு மட்டக்களப்பு. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரியுள்ளார்.
நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் ஈடுபடுமாறு அவர் கோரியுள்ளார்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறி வகைகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாமல் இருப்பதால், அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய நிலங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்யும் மழையால் நுவரெலியாவில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.