சிகரட் விலை அதிகரிக்கும் சாத்தியம்? 2025 பாதீடு குறித்த தீர்மானம்!
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் சிகரட்டுக்கு பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக சில்லறைக் கடைகளில் பெரும்பாலும் சிகரட் முற்றாக இல்லை என்ற நிலையே உள்ளது.
எனினும், சிறப்பு அங்காடிகளில் சிகரட் பெட்டிகள் மற்றும் மொத்தமாகவே விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த வருடமும் ஜனவரி முதலாம் திகதி சிகரட்டின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் படி சிகரட் ஒன்று சராசரியாக 35 ரூபாய் வரை உயரக் கூடும் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் எரிபொருட்களில் விலைகள் இன்று நள்ளிரவு குறைவடையலாம் என்பதும் கூடுதல் தகவலாகும்.
பெரும்பாலும் இன்று இந்த திருத்தம் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் நாளை புதிய விலைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே, 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று (31) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கு இணங்கியிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு செலவுத் திட்ட உரை) பெப்ரவரி 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் பெப்ரவரி 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.
வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.