பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - சுகாதார அமைச்சு!
கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களின் இரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது பரவி வரும் நோய் நிலைமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், தற்போது பரவிவரும் வைரஸ் நோய் குறித்து தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த மாதத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 8 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் டெங்கு நோய் காரணமாக டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'மக்களுக்காக நாம்' என்ற திட்டத்தின் கீழ் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
செயற்றிட்டத்தின் போது பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் தொடர்ந்தும் ஒரு வாரத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், மன்னார் மாவட்டத்திலும் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது, மன்னார் மாவட்டத்தில் 88 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து மன்னாருக்கு வருகை தந்தவர்களே இவ்வாறு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.