வடக்கு - கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் அடுத்த வாரம் ஹர்த்தால்  போராட்டம்!

ஹர்த்தாலுக்கான திகதி குறித்து தீர்மானிப்பதற்கு தமிழ் கட்சிகள் இன்று சந்திப்பை நடத்தியிருந்தன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமை, தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறை சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டித்தும், இந்த மேற்கொள்ளப்படவுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற, குறித்த கலந்துரையாடலில், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். 

எனினும் குறித்த கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் எவரும் பங்கேற்றிருக்கவில்லை. 

இந்த நிலையில், இன்றைய தினம் பங்கேற்றிருந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் 20ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளன. 

இதேவேளை, முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி உயர்நீதிமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்று முற்பகல் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு, போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.