மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் இறுதி கிரியைகள் இன்று மாலை (29) இடம்பெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அவரது உடலை தாங்கிய பேழை பயணித்த வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தியதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியாட் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் சில மணிநேரம் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

எனினும் அங்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் சனநெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, பொது மக்கள் அஞ்சலி செலுத்தி திரும்புவதற்கு ஏதுவாக விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் தமிழக பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இந்தநிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அலுவலகத்துக்கு மீண்டும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அரச மரியாதையுடன் அவரது உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில், , 'புரட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததுடன் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் என்றும், அவரது பிறந்த திகதி மற்றும் மறைந்த திகதியும் பொறிக்கப்பட்டிருந்தன.