விஜயகாந்தின் மறைவு, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது - நரேந்திர மோடி!

 காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்தின் மறைவு, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் மறைவு, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது - நரேந்திர மோடி!

அவர் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அரசியல், சினிமா, பொதுச்சேவையில் விஜயகாந்த் தவிர்க்க முடியாத இடத்தினை வகித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது இடத்தினை நிரப்ப முடியாது என்பதுடன், விஜயகாந்த்தின் மறைவு வருத்தமளிப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் தென்னிந்திய பிரபல நடிகருமான விஜயகாந்தின் உடல் நாளைய தினம் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின தலைமை அலுவலகத்தில் நாளை பிற்பகல் 4.30 அளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக விஜயகாந்தின் உடல் சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து செல்லப்பட்டு, தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமையகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் தென்னிந்திய பிரபல நடிகருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேரில் சென்று விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதன் பின்னர் முதலமைச்சர் தமது எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலமானார்.

கொரோனா தொற்றை அடுத்து ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த, மியாட் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.