மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது – உயர்நீதிமன்றம் கருத்து
பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதி ஒன்று அண்மையில் விவாகரத்து பெற்றனர்.
அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது மனைவி பி.எஸ்சி பட்டதாரி என்பதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியும்.
எனவே, ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனைவி ஒரு பட்டதாரி என்பதால், அவரை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மனைவி வேலைக்குச் செல்ல மறுப்பதாக முன்கூட்டியே அனுமானிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
பின்னர் கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜீவனாம்சத்தை உயர்த்தி தர வேண்டுமென மனைவி முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்தனர்.