ஊடகத் துறைக்கான கொள்கையை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

ஊடகத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (26) நடைபெற்றது.

ஊடகத் துறைக்கான கொள்கையை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து இலங்கையில் தேசிய ஊடக கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும், இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை ஒன்றை அமைப்பதிலும், செயற்பட்டு வருகின்றது. 

 அந்த வகையில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சினால் கல்வியியலாளர்கள், ஊடகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழுவின் பரிந்துரைக்கமைய மாவட்டங்கள் தோறும் களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் தேசிய ஊடக கொள்கையில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலார்களின் கருத்துக்களை அறிவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. 

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் றோகினி பீரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ், கிழக்குப் பல்கலைக் கழக சிரோஸ்ட விரிவுரையாளர் சிவப்பிரியா, சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது, வெகுஜன ஊடக அமைச்சினால் இலங்கையில் தேசிய ஊடக கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அக்கொள்கையில் இடம்பெறவேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.