ரஷ்யாவில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் : 6 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு!

ரஷ்யாவில் திடீரென நடத்தப்பட்ட  துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் தாகெஸ்தான் (Dagestan) பகுதியில் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள் மூலம் பொலிஸ் அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த  தாக்குதல்கள் ஒரு தொழுகைக்கூடம், ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு பொலிஸ் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் ஒரு பாதிரியாரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரிகள் இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்காச்சகாலா மற்றும் டெர்பெண்ட் பகுதிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

"அடையாளம் தெரியாத நபர்கள் யூத தொழுகைக் கூடம் மற்றும் தேவாலயம் மீது தானியங்கி ஆயுதங்களால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான யூத தொழுகைக் கூடம் தீயில் எரிந்தது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின்னர் தாக்குதல்காரர்கள் காரில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.