சீரற்ற காலநிலை நாளை முதல் சீரடையும்!

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சீரற்ற காலநிலை நாளை முதல் சீரடையும்!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றிரவு வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் உள்ளது.

இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,200 குடும்பங்களைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைக்கு அமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்படி. வட மாகாணத்தில் 1,708 குடும்பங்களைச் சேர்ந்த 5,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 3,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.