புளொட் பிரதித் தலைவர் இராகவனின் இறுதிக்கிரியை ஞாயிறன்று இடம்பெறும்!

புளொட் பிரதித் தலைவர் இராகவனின் இறுதிக்கிரியை ஞாயிறன்று இடம்பெறும்!

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான இராகவன் (ஆர்.ஆர்) என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இருதயம் தொடர்பான உபாதையால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக மருத்துவமனைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அறுவை சிகிச்சையின் பின் உடல் நிலை தேறிய போதும், திடீரென நிலைமை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

சுமார் நான்கு நாட்களாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இராகவன் நேற்று (22) மாலை காலமானார்.

காலமாகும் போது அவருக்கு 61 அகவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலம் கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் நாளை (24) காலை 9 மணி முதல் 11 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

பின்னர், வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மறுதினம் (25) இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

வவுனியா உமாமகேஸ்வரன் மண்டபத்தில் காலை 11 மணிக்கு இறுதிக்கிரியைகள் ஆரம்பித்து, அஞ்சலி உரைகளின் பின்னர் உடலம் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.