ஆசியாவின் மத்திய வங்கிகள் பணவியல் கொள்கைகளை தளர்த்தும் சாத்தியம்!
பணவீக்கம் மிதமாக இருப்பதால் ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவியல் கொள்கைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆசிய பிராந்திய பொருளாதார கண்ணோட்டம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின், ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம், தமது சொத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நிலையான மற்றும் தெளிவான பதிலை சீனா வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆசியாவின் சராசரி பணவீக்கம் 2022 ஆம் ஆண்டில் 3.8 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
குறிப்பாக, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களில் விரைவான முன்னேற்றமும் பதிவாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் தங்களது பணவீக்க இலக்குகளை அடையும் போக்கில் உள்ளன.
இதன்காரணமாக, பணமதிப்பு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்படலாம்.
எவ்வாறாயினும், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின், ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியத்தை அண்மித்திருந்ததுடன், ஜப்பானின் பணவீக்கம் 2025 ஆண்டளவில் அந்த நாட்டு மத்திய வங்கி இலக்கை விட இரண்டு சதவீதம் அதிகமாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒப்பீட்டளவில் ஆசிய மத்திய வங்கிகள் ஏனைய பிராந்தியங்களில் உள்ள வட்டி விகிதங்களை விட குறைவான அளவிலேயே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
இதன்படி, அமெரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள மாறுபட்ட பணவியல் நிலைப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டும் கூர்மையான மாற்று விகித இயக்கங்களை தூண்டும் அபாயம் காணப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின், ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிய நாடுகள் 2023 ஆம் ஆண்டில் செயற்பட்டதை போன்றே 2024 ஆம் ஆண்டும் மீண்டும் உலக வளர்ச்சிக்கு மூன்றில் இரண்டு பங்கை வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
எனினும், சீனாவின் பொருளாதாரத்தில் காணப்படும் மந்தநிலை காரணமாக 2025 ஆண்டில் பிராந்தியத்தின் வளர்ச்சி 4.3 சதவீதமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன் காரணமாக சீனா தமது சொத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நிலையானதும் தெளிவானதுமான தகவலை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின், ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.