மருத்துவரல்லாத பணியாளர்களுக்கு களங்கம் - இடமளிக்க முடியாது என்கிறது அரச மருத்துவ சங்கம்!

மருத்துவரல்லாத பணியாளர்களுக்கு களங்கம் - இடமளிக்க முடியாது என்கிறது அரச மருத்துவ சங்கம்!

குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படும் சில தொழிற்சங்கத் தலைவர்கள் சுகாதாரத் துறையில் மருத்துவரல்லாத பணியாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதில் சுகாதார பணியாளர்களை தொடர்ந்தும் தவிர்க்கும் பட்சத்தில் நாளை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அந்த சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

அரச சுகாதார நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து மருத்துவரல்லாத பணியாளர்களுக்கும் இது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திறந்த அறிவித்தல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான பிரதிகள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.

இந்தநிலையில், தமது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாவிடின் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த 72 சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

எவ்வாறாயினும், குறுகிய அரசியில் நிகழ்ச்சி நிரலுக்காக சில தொழிற்சங்க தலைவர்கள் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது.