தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறும் நோக்கத்தில் வீதிகள் புனரமைப்பு? திருக்கோவில் மக்கள் விசனம்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் காலங்களை மையப்படுத்தி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் வேட்பாளர் ஒருவரினால் வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

அவ்வாறான வீதிகள் பிரதேச சபையினுடைய அனுமதியின்றியும் பிரதேச செயலாளரின் அனுமதியின்றியும் போடப்பட்ட வீதிகளாகும். 

இவ்வாறு போடப்பட்ட வீதிகள் மக்களுக்கு பாரிய இடையூறாகவும் அந்த வீதியினால் பயணம் செய்ய முடியாத அளவுக்கு படுமோசமான நிலையில் போடப்பட்டு இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது

இது தொடர்பாக அவ் வீதியில் வசிக்கும் மக்கள் எமது செய்தி சேவைக்கு முறைப்பாடு செய்திருந்தனர். 

போடப்பட்ட இவ் வீதிகளுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்துமாறும் அவ்வீதியானது சட்ட விரோதமாக போடப்பட்டிருந்தால் அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தேர்தல் காலங்களில் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமையை பாதிப்பதுடன் தேர்தல் சட்ட விதிமுறையை மீறியதாகவும் கருதப்படுகின்றது.

இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களது கோரிக்கை.

இது குறித்து எமது செய்தி சேவை திருக்கோயில் பிரதேச சபை செயலாளரிடம் வினவிய போது தாம் இது குறித்து அவதானம் செலுத்தியதாகவும், சட்டவிரோதமாக போடப்படும் வீதிகள் குறித்து தாம் நேரில் சென்று ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டார்

குறிப்பிட்ட சில பகுதிகளில் இடப்பட்ட வீதிகள் பொதுமக்கள் தாங்களாகவே செப்பனிட்டுக் கொண்டதாகவே கூறினர்.

என்னிடம் தேர்தல் காலத்தில் தனிப்பட்ட முறையில் இவ்வாறான அபிவிருத்தி பணிகள் இடம்பெறுவது அனுமதிக்க முடியாத விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் எமது செய்தி சேவை திருக்கோவில் பிரதேச செயலக செயலாளரின் கருத்தையும் கோரியது.

குறித்த அபிவிருத்தி பணிகள் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றியே இடம்பெற்று வருவதாகவும் தாம் இது குறித்து கிராம சேவை மற்றும் பிரதேச அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 தேர்தல் காலத்தில் தனிப்பட்ட ரீதியான லாபங்களை நோக்காக கொண்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் காலங்களில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலை திட்டம் தொடர்பான திருக்கோவில் பிரதேச செயலாளருடைய கருத்தும் பிரதேச சபை செயலாளருடைய கருத்தும் இவ்வாறு அமைகின்றது.

இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?