தவணை முறையில் மின் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு!
புதிய மின் கட்டண இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாய்மூல பதிலை எதிர்ப்பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன இன்று நாடாளுமன்ற கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நுகர்வோரின் நலனை கருத்திற்கொண்டு புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இதற்காக நுகர்வோர் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும். எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும். இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன்,
உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை, மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான மின் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பதற்கான அபராதத் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, 1,300 ரூபாயாக காணப்பட்ட குறித்த அபராத தொகையை 800 ரூபாயாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.