பெண்ணின் சடலத்தை மீட்கச்சென்ற இராணுவ சிப்பாய் மரணம் - மலையில் உள்ள மர்ம மூலிகை காரணமா?
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலை மேல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் மலையின் மேல் பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (02) உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலை மேல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை கீழே இறக்கச் சென்ற இராணுவ கோப்ரல் ஒருவர் மலையின் மேல் பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக இன்று (02) உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
கிறேட்வெஸ்டன் வனப்பகுதியில் நேற்று (1) மாலை கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் சடலத்தை மீட்பதற்காக சென்றிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் திடீர் சுகவீனமடைந்ததையடுத்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
நுவரெலியா இராணுவ முகாமில் கடமையாற்றிய அனுராதபுரம், கலென்பிடுனுவெவ, தூதுவெவ, எல்லும்கசாய பிரதேசத்தை சேர்ந்த சந்துன் குமார ஹேரத் (37) என்ற இராணுவ கோப்ரல் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் இன்று காலை முதல் மிகுந்த பிரயத்தனத்துடன் மலை நடுப்பகுதியில் பாரிய கற்பாறை நடுவே இறந்து கிடந்த யுவதியின் சடலத்தை இன்று மாலை மலையிலிருந்து மீட்டு கீழே கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
மலையேறச் செல்பவர்களைத் தவிர வேறு எவரும் மலை உச்சிக்கு செல்வதில்லை எனவும், வெளிப்பிரதேசத்திலிருந்து வந்த யுவதியின் சடலமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த யுவதியின் சடலம் இனங்காணப்படாத நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பிரேத பரிசோதனைகள் நாளை (3) நடைபெறவுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மலையகத்தில் பெரும்பாலான மலைப்பகுதியில் “திசைப்பூண்டு” எனப்படும் ஒருவகை மூலிகை இருப்பதாகவும், அந்த மூலிகையின் ஏதேனும் ஒரு பாகத்தை தொட முயன்றாலோ அல்லது மிதிக்க முற்பட்டாலோ அதிலிருந்து வெளிவரும் வாடை ஒருவரை சுயநினைவற்ற தன்மைக்கு கொண்டு செல்லும் என்ற ஐதீகம் நிலவுகின்றது.
குறித்த மூலிகையை தீண்டுபவர்கள் அல்லது தெரியாமல் தீண்டலுக்கு உள்ளாகுபவர்கள் தனிமையாக திசைமாறி செல்லும் நிலை ஏற்படும்.
அவர்கள் உடனடியாக நீர்நிலை அல்லது ஆற்றுநீரை நாடுமிடத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் இவ்வாறான மலையேற்றத்தின் போது தனியாக செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
எவ்வாறாயினும், குறித்த பெண் தொடர்பான எவ்வித ஆவணங்களும் கிடைக்கவில்லை என்பதால் இது ஒரு கொலையாகவும் இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.