சாணக்கியன் மீது ரோஹித அபேகுனவர்தன தாக்குதல் முயற்சி?
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தம்மீது இன்றைய தினம் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்டதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தம்மை அவர் அச்சுறுத்தியதோடு நாடாளுமன்றத்தில் பிரதமரின் அலுவலகத்திற்கு சென்ற போது, அவர் இவ்வாறு தாக்குதல் நடத்த முற்பட்டதாக இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நீங்கள் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியதுடன் தம்மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவே அதனை தடுத்திருந்தார்.
பிரதமர் காரியாலய உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர உள்ளிட்டோர் குறித்த சம்பவத்திற்கு சாட்சியாளர்களாவர்.
நாட்டின் பிரதமர் சிங்களவர்களுக்கு உரியவர் எனவும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எமது பிரதமரை நீங்கள் எவ்வாறு சந்திக்கலாம் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தம்மிடம் கேள்வி எழுப்பியதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கையின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது என்பதுடன், நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராவார்.
இதுவா? நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த காலங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதனையே தற்போதும் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
எனவே, தமது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அறியப்படுத்தியுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில், நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் மின்தூக்கி உள்ள பகுதிக்கு தம்மை அச்சுறுத்தும் வகையில் அழைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனடிப்படையில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவே ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக வழியில் செல்லும் தாம் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இராசமாணிக்கம் சாணக்கியனின் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நிராகரித்திருந்தார்.
பாதுகாப்பாக அழைத்து செல்வதற்காகவே தாம் அவரை மின்தூக்கிக்கு அருகில் அழைத்ததாகவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.