கடும் மழை காரணமாக புத்தளத்தில் 15,000 மெற்றிக் தொன் உப்பு சேதம்!

கடும் மழை காரணமாக புத்தளத்தில் 15,000 மெற்றிக் தொன் உப்பு சேதம்!

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு, உப்பு உற்பத்திக்கு தேவையான சூரிய ஒளி போதியளவு கிடைக்காததும், தொடர்ச்சியாக மழை பெய்வதும் இதற்குரிய முக்கிய காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

இலங்கையின் மொத்த உப்பு உற்பத்தியில் புத்தளம் மாவட்டம் சுமார் 60 சதவீதம் பங்களிப்பை வழங்கி வருவதுடன், வெயில் காலங்களில் சுமார் 100,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான உப்பு அறுவடை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் மற்றும் அரச உப்பு உற்பத்தியாளர்களின் தொடர்புடைய துறைகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், புத்தளம் மாவட்டத்தில், சிறுபோக பருவத்தில் உப்பு அதிக அறுவடைக்கு வழிவகுத்துள்ள நிலையில், நேற்று (17) முதல் இன்று வரை தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக, புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர். 

இதனால், தாம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதிக கடன் சுமைகளோடு தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாகவும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.