பசில், மகிந்த ரணிலுக்கு இடையே அவசர சந்திப்பு!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்தும் பசில் ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பானது, இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில், இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவில் தங்கியிருந்த பசில் ராஜபக்ஸ, கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார்.
பல்வேறு கட்சிகள் தமது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள நிலையில், பசில் ராஜபக்ஸ தரப்பினர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பாரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்ஸாவினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன், அது தொடர்பான தீர்மானத்திற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்,
எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்தும் இதன்போது, கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.