இம்ரான் கான் மற்றும் அவரின் மனைவிக்கு பத்தாண்டுக்கு மேல் சிறைத்தண்டனை!

இம்ரான் கான் மற்றும் அவரின் மனைவிக்கு பத்தாண்டுக்கு மேல் சிறைத்தண்டனை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நேற்றைய தினம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்றைய தினம் அவருக்கும் அவரது மனைவியான புஷ்ரா பீபிக்கும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இம்ரான் கான் ஏற்கனவே 3 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அரச ரகசியங்களை கசிய விட்ட குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதவிர, தனிப்பட்ட இலாபத்திற்காக அரச அன்பளிப்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இன்றைய தினம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இம்ரான் கானின் மனைவி காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான தண்டனைகள் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்படும் என நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தமக்கு எதிரான பல வழக்குகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக இம்ரான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.