தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் சம்மதம், தலையீடு அல்லது ஊக்கத்துடனேயே தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பிரசார நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆபத்துக்கள் மற்றும் உடல் மற்றும் உளவியல் அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிறுவர் பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அனைத்து பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இது போன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.