1550 கிலோ பாரவூர்தியை தாடி மற்றும் தலைமுடியினால் 500 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்ற உழவர் 1550 கிலோ எடையுள்ள Tata ACE ரக ஊர்தியை தனது தாடியினால் 500 மீட்டர் தூரமும் தலைமுடியினால் 500 மீட்டர் தூரமும் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.
நேற்று [24] கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற
இந்த நிகழ்வை நேரில் கண்காணித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா போன்றோர் உறுதி செய்தார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுக் கேடயம் போன்றவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி பாராட்டப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த சாதனை முயற்சிக்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கியிருந்தார்.
இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபில் ஹெல்பிங் பீபில் பவுண்டேஷன் என்ற சமூகநல சேவை அமைப்பும் இணைந்து நடத்தியிருந்தன.
செல்லையா திருச்செல்வம் ஏற்கனவே இரண்டு முறை சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இளைய தலைமுறையினர் திறன்பேசிகளிலேயே மூழ்கியிருந்து பல்வேறு விதமான உடல் மற்றும் மன நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.
மேலும் சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிறார்கள்.
எனவே, உடற்பயிற்சிகளில் தினமும் ஒரு மணி நேரத்தை செலவிடுவதினால் 60 வயதிலும் உடல் மற்றும் மன நலத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இந்த சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டதாக சோழன் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் தெரிவித்தார்.